



அன்பின் சகோதரர்களே, இம்முறை ஷவ்வால் தலைப்பிறை உலகம் முழுவதும் ஒதே திகதியில் தென்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இருந்தாலும் அதனைப் பாழடிக்கின்ற ஒரு சாரார் அதற்காகத் தயாராகி வருகின்றனர். எனவே கள நிலவரங்களை ஒரு அலசலாக உங்களுக்கு இங்கே தருகின்றேன். சற்று நீளமான தாக இருந்தாலும் இதனை என்னால் முடியுமான வரை எளிமைப் படுத்தி இருக்கின்றேன். இதனை முழுமையாக வாசித்ததன் பின்னர் உங்களது குதர்க்கம் விதண்டாவாதங்கள் அற்ற ஆரோக்கியமான் எதிர்வினைகள் பின்னுட்டல்களை எதிர்பார்க்கின்றேன். குழுமத்தின் ஆரோக்கியத்தைப் பேணி கருத்துக்களைப் பரிமாறுவோம். இன்ஷா அல்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் இம்முறை ஷவ்வால் மாதத்திற்கு முந்திய அமாவாசை ஏற்படும் நாள் 08.09.2010ம் திகதியாகும்.
08.09.2010
இலங்கை - கொழும்பு
ஷவ்வாலுக்கு முந்திய புவிமைய அமாவாசை இலங்கை நேரப்படி 08.09.2010ம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு ஏற்படுகின்றது. அப்போது GMT நேரம் காலை 10.30 ஆகும்.
அன்றைய தினம் இலங்கை கொழும்புக்கான புவிப்பரப்பு அமவாசை மாலை 05.26 மணிக்கு ஏற்படுகின்றது. இத்தினத்தில் சூரியன் அஸ்தமிக்கின்ற போது நேரம் மாலை 06.15 மணியாக இருக்கும். அப்போது அமாவாசைக்குப் பின்னான சந்திரனின் வயது 49 நிமிடங்கள் மாத்திரமே. இந்தப் பெறுமானம் சந்திரன் பிறையாகத் தெரிவதற்கு போதாது.
அது மட்டுமல்லாது அன்றைய தினம் மாலை 06.05 மணிக்கு சந்திரன் கொழும்பில் அஸ்த்தமித்து விடுகின்றது. அதாவது சூரியனுக்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே சந்திரன் அஸ்த்தமித்து விடுகின்றது.
ஆகவே 08ம் திகதி கொழும்பில் பிறை தெரிய வாய்ப்பில்லை என்பதனால் 09ம் திகதி ஷவ்வால் ஆரம்பமாக முடியாது.
சஊதி அரேபியா – மக்கா
ஷவ்வாலுக்கு முந்திய புவிமைய அமாவாசை சஊதி அரேபிய நேரப்படி மக்கா நகரில் 08.09.2010ம் திகதி பிற்பகல் 01.30 மணிக்கு ஏற்படுகின்றது. அப்போது GMT நேரம் காலை 10.30 ஆகும்.
அன்றைய தினம் சஊதி அரேபியா மக்கா நகருக்கான புவிப்பரப்பு அமவாசை மாலை 01.55 மணிக்கு ஏற்படுகின்றது. இத்தினத்தில் சூரியன் அஸ்தமிக்கின்ற போது நேரம் மாலை 06.33 மணியாக இருக்கும். அப்போது அமாவாசைக்குப் பின்னான சந்திரனின் வயது 4 மணித்தியாலங்கள் 39 நிமிடங்கள் மாத்திரமே. இந்தப் பெறுமானம் சந்திரன் பிறையாகத் தெரிவதற்கு போதாது.
அது மட்டுமல்லாது அன்றைய தினம் மாலை 06.24 மணிக்கு சந்திரன் மக்காவில் அஸ்த்தமித்து விடுகின்றது. அதாவது சூரியனுக்கு 09 நிமிடங்கள் முன்னதாகவே சந்திரன் அஸ்த்தமித்து விடுகின்றது.
ஆகவே 08ம் திகதி மக்காவில் பிறை தெரிய வாய்ப்பில்லை என்பதனால் 09ம் திகதி ஷவ்வால் ஆரம்பமாக முடியாது.
உலகம்
08.09.2010 ம் திகதி உலகின் எந்த ஒரு நிலப் பிரதேசத்திலும் ஷவ்வால் தலைப் பிறை தென்படுவதற்கான சாத்தியப்பாடுகள் கிஞ்சித்தும் இல்லை.
09.09.2010
இலங்கை – கொழும்பு
இத்தினத்தில் கொழும்பில் சூரியன் அஸ்த்தமிக்கின்ற போது அமாவாசைக்குப் பின்னான சந்திரனின் வயது 24 மணித்தியாலங்களும் 46 நிமிடங்களுமாகும். இந்தச் சந்திரன் சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் 41 நிமிடங்கள் வரை மேற்கு வானில் இருக்கும். சந்திரனின் பிரகாசம் முழு நிலவின் பிரகாசத்தின் 01.88 வீத பிரகாசத்தைக் கொண்டிருக்கும். சூரிய அஸ்த்தமனத்தின் போது அடிவானில் இருந்து 10 பாகை உயரத்தில் இருக்கும் இந்தச் சந்திரன் தெளிவாக வெற்றுக் கண்களுக்குப் புலப்படும்.
எனவே இன்ஷா அல்லாஹ் றமழான் 29 நாட்களாக முடிவடையும், 10.09.2010ம் திகதி ஷவ்வால் முதல் நாளாக அமையும்.
சஊதி அரேபியா - மாக்கா
இத்தினத்தில் மக்காவில் சூரியன் அஸ்த்தமிக்கின்ற போது அமாவாசைக்குப் பின்னான சந்திரனின் வயது 28 மணித்தியாலங்களும் 38 நிமிடங்களுமாகும். இந்தச் சந்திரன் சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் 34 நிமிடங்கள் வரை மேற்கு வானில் இருக்கும். சந்திரனின் பிரகாசம் முழு நிலவின் பிரகாசத்தின் 02.33 வீத பிரகாசத்தைக் கொண்டிருக்கும். சூரிய அஸ்த்தமனத்தின் போது அடிவானில் இருந்து 06 பாகை உயரத்தில் இருக்கும் இந்தச் சந்திரன் வெற்றுக் கண்களுக்குப் புலப்படும் சாத்தியம் உண்டு. இன்ஷா அல்லாஹ்.
எனவே றமழான் 30 நாட்களாக முடிவடையும், 10.09.2010ம் திகதி ஷவ்வால் முதல் நாளாக அமையும்.
உலகம்
இவ்வருடம் ஷவ்வால் தலைப்பிறையானது 09.09.2010ம் திகதி சர்வதேச தேதிக்கோட்டுப் பகுதியில் (பிஜி தீவுகள்) முதன் முதலில் தென்படும் இன்ஷா அல்லாஹ். அதனைத் தொடர்ந்து உலகின் அனைத்து நிலப்பகுதிகளிலும் அவ்வப்ப பிரதேசங்களுக்குரிய சூரிய அஸ்த்தமனத்தின் போது அங்கே தலைப்பிறை தென்படும்.
ஆதலால் எதிர்வரும் 10.10.2010ம் திகதி உலகம் முழுவதும் ஒரே நாளில் ஈதுல் பித்ர் ஆக இருக்கும்.